மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர்களில் ஒருவரும் தொழிலதிபருமான சிகே குமரவேலை சந்தித்து அரசியல்ரீதியாக சில கேள்விகளை முன்வைத்தோம்.
எந்தெந்த விஷயங்களை முன் வைத்து மக்கள் நீதி மையம் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளப்போகிறது?
நாற்பதும் பத்தும் ஐம்பது ஆண்டுகளாக இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல தமிழக மக்கள் மாறிமாறி வாய்ப்பு தந்தார்கள். அதை அவர்கள் சரியாகப் பயன்படுத்தாததால் தமிழகம் பின்தங்கியிருக்கிறது. திமுக, அதிமுக எனும் மிகப் பெரிய கட்சிகளுக்கு 50 ஆண்டுகளாக மக்கள் வாக்களித்தார்கள். மாறுதலை விரும்பினாலும் அவர்களுக்கான மாற்று இல்லை. இப்போது கலைஞர், ஜெயலலிதா ஆகிய ஆளுமைகள் இல்லாத ஒரு தேர்தல் களத்தை முதல் முறையாக தமிழகம் சந்திக்கிறது. எப்போதுமே 15 சதவீதம் வாக்காளர்கள் ஒரு மாறுதல் வேண்டுமென தேடுவார்கள். இந்த முறை கிட்டத்தட்ட 50 சதவீதம் மக்கள் மாறுதலைத் தேடுகிறார்கள். இந்தத் தேர்தலை தீர்மானகரமான தேர்தலெனச் சொல்லலாம்.
இரண்டு கட்சிகளும் ஒன்றுமே செய்யவில்லையென சொல்லமுடியாது. மற்ற மாநிலங்களைவிட தமிழகம் மேலே இருப்பதற்குக் காரணம், அவர்கள் செய்ததுதான். சமூக நீதி, கல்வி போன்ற பல நல்லவற்றைச் செய்திருக்கிறார்கள். 1990-க்குப் பிறகு புதிதாக எதையும் செய்யவில்லை. பெரியார், அண்ணா என வந்த தமிழகம், கலைஞர்,- ஜெயலலிதா என்று ஆனது. அதிலும் குறிப்பாக ஜெயலலிதா அவர்கள் 20 ஆண்டுகள் இருந்தார்கள். கலைஞர் 10 ஆண்டுகள்தான் ஆட்சியிலிருந்தார். கொடநாடு வந்தது, போயஸ் தோட்டம் பெரிதானது. ஏ1, ஏ2 வந்தது.. கூவத்தூர் வந்தது. 2 ஜி வந்தது. ஆனால் மக்கள் நிலைமை மாறவில்லை. அது மாறவேண்டும். அதை எடுத்துச்செல்லத்தான் மக்கள் நீதி மையம்!
வடமாநிலங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலைப் போல, உங்கள் தலைவர் கமலும் ஊழலற்ற ஆட்சி, வெளிப்படையான நிர்வாகம் என்பதையே அதிகமாக முன்வைக்கிறாரே?
நிறைய பிரச்னைகள் இருக்கின்றன... ஒரு வாளியில் ஓட்டை இருக்கிறது. அதை அடைக்காமல் தண்ணீரை எடுக்கப் பார்த்தால் தண்ணீர் கீழே போய்க்கொண்டே இருக்கும். ஊழல் என்பது
சின்ன ஓட்டை இல்லை, வாளியின் அடித்தூரே காணோம். அந்த ஓட்டையை அடைத்தால்தான் அதில் என்ன தண்ணீரை எடுப்பது என்பதைப் பற்றி யோசிக்கமுடியும். முதலில் தீர்க்கவேண்டியது, ஊழல். அதன்பிறகு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பெண்கள் நலன் என பலதரப்பட்ட பிரச்னைகள், வேலைகள் இருக்கின்றன. ஊழலை முடித்தால்தான் அங்கு போகமுடியும். எனவே, இந்த ஊழல் ஆட்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.
ஊழல் போன்றவை தமிழ்நாட்டில் இருப்பதைச் சொல்கிறீர்கள்.. இந்த நிலைமை தமிழ்நாட்டில்தான் இருக்கிறதா.. டெல்லிசார்ந்த ஆட்சியதிகாரங்களில் இல்லை என்கிறீர்களா?
இங்கைவிட அங்கு அதிகமாக இருக்கிறது. கெட்ட விசயங்கள் அங்குதான் அதிகம். நாம் 90 மதிப்பெண் வாங்கவேண்டியவர்கள், ஏன் 60 வாங்கினாய் எனக் கேட்டால், அவன் 35 , 20 வாங்கியிருக்கிறான் என பெருமை பேசமுடியாது. நம்முடைய திறன் எவ்வளவு,.. 80, 90 வாங்கமுடியுமா என தமிழ்நாடு யோசிக்கவேண்டும். அதை விட்டுவிட்டு ராஜஸ்தானைவிட, உ.பியைவிட, பீகாரைவிட மத்தியபிரதேசத்தைவிட சிறப்பாகச் செயல்படுவதாக சொல்லக் கூடாது. அவர்கள் நம்மைப் பார்த்து சில நல்ல விசயங்களில் முன்னேறவேண்டும். அதற்காக, நாம் கீழே போகவேண்டியதில்லை.
இப்போதைய அதிமுக ஆட்சிக்கு மாற்றாக திமுக.ஒரு நல்லாட்சியைத் தரும் என அவர்கள் வாக்குறுதி அளிக்கிறார்கள். இப்போதைய அதிமுக ஆட்சிதான் மோசம் எனும் திமுகவின் வாதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மறதியால் நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம். 10 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாடு எப்படி இருந்தது, என்னென்ன அராஜகம் நடந்தது, எப்படி ஊழல் நடந்தது என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருந்தோம். திமுக என்றவுடன் அவர்கள் சுத்தமானவர்கள், ரொம்ப பரிசுத்தமான ஆவி என சொல்லிவிடமுடியாது. இரண்டு கட்சிகளும் ஊழல்தான். நான்கு ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அபூர்வ சகோதரர்கள் போல. கூவத்தூரில் என்ன நடந்தது? எப்படி இவர்கள் வந்தார்கள்? இவர்கள் யாருக்கும் பதில்கூறக் கடப்பாடு இல்லாதவர்கள் என ஆகிவிட்டது. பிரிட்டன், முகலாய மன்னர்கள் காலத்தில் கொள்ளையடித்ததாகச் சொல்வார்களே அதைப்போல.!
ஊழல் எதிர்ப்புக்கு இவ்வளவு முதன்மை தருகிறீர்கள். இதுவரை நடந்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் பலவற்றுக்கு மக்கள் நீதி மய்யம் என்ன எதிர்வினை ஆற்றியிருக்கிறது?
நாங்கள் கட்சி தொடங்கியே மூன்று ஆண்டுகள்தான் ஆகிறது. மத்தியிலோ மாநிலத்திலோ ஊழல் தொடர்பாக சில சமயம்
சட்டரீதியாகப் போயிருக்கிறோம். கிராம சபைக் கூட்டத்தை எடுத்துக் கொண்டால், கமல் அவர்கள் பேசியபிறகுதான் பரவலாகப் போனது. எந்தெந்த இடத்தில் தவறு வருகிறதோ அங்கெல்லாம் அப்போதெல்லாம் அவர் சுட்டிக்காட்டியும் குட்டிக்காட்டியும் வருகிறார்.
மக்களின்பால் கட்சியைக் கொண்டுசேர்க்க உங்கள் கட்சித் தலைவரின் தனித்து விலகி மேடைகளில் தோன்றும் அணுகுமுறை, தடங்கலாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்களே?
பழைய புத்தகத்தைப் படித்துவிட்டு புதிய தேர்வை எழுத அவர்கள் தயாராகிறார்கள். நாடும் மக்களும் மாறிவிட்டார்கள். இன்றைக்கு ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டன. முந்தைய பட்டன் போனை வைத்துக்கொண்டு ஸ்மார்ட்போன் மோசமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அது அவர்களின் தவறு. அவர்கள்தான் முதலில் மாறவேண்டும். சமூக ஊடகத் தலைமுறைக்கு ஏற்ப புது விதிகளைப் போடுகிறவர்கள்தான் வெற்றிபெறுவார்கள். புதுமை வரும்போதெல்லாம் இப்படித்தான் நடக்கும்.
இன்னமும் அடையாளப்படியான அரசியல்தான் நடக்கிறது. பிம்பங்களைத் தான் நம்புவது தொடர்கிறது. அதாவது கட்சிக்கென வாக்களிப்பதைவிட, கலைஞர், ஜெயலலிதா என அடையாளங்களுக்கு வாக்களிப்பதையே விரும்புகிறார்கள். அதனால் தலைவர் கமலை அடையாளமாக முன்னிறுத்தவேண்டும் என உத்தி வகுப்பாளர்கள் யோசனை உருவாக்கி உள்ளனர். எனவே இந்த உத்தியைப் பயன்படுத்துகிறோம். அவ்வளவுதான். மற்றபடி மேடையை விட்டு கீழே இறங்கினால் எங்களோடெல்லாம் கலந்துதான் பழகுகிறார். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தத் தேர்தலைத் தீர்மானிக்கப் போவதில்லை. அதற்குக் கீழ் உள்ளவர்கள் திமுக, அதிமுகவுக்கு தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். பெண்களும் இளைஞர்களும்தான் 2021 தேர்தலின் சாவி. திமுகவும் அதிமுகவும் பழைய சாவியை வைத்துக்கொண்டு பூட்டைத் திறக்கப்பார்க்கிறார்கள். ஆனால் பூட்டு மாறிவிட்டது. இந்தத் தேர்தல் பூட்டுக்கான சாவி இளைஞர்களிடத்தில் இருக்கிறது. அவர்கள் மக்கள் நீதி மையத்தின் பக்கம் இருக்கிறார்கள்.
மார்ச் 2021